Description
முன்னதாகவே மண்டபப் படிகளில் ஏறி மேலே இருந்த சமதரையில் நின்றுவிட்ட தனது கரிய புரவிமீது தாவி ஏறப்போன விஜயன், தன்னைப் பத்து வீரர்கள் சூழ்ந்து கொண்டதையும், இருவர் தன் தோளைப்பிடித்து அழுத்தியதையும், மற்றும் இருவர் கைகளைப் பிடித்து இழுக்க முற்பட்டதையும் கண்டவுடன், அவர்களுக்குப் பைத்தியம் பிடிக்கவில்லையென்பதை உறுதி செய்துகொள்ளத் தனது உடலைச் சரேலென்று நிமிர்த்தி விறைத்து நின்றுவிட்டான். பார்ப்பதற்கு ஒல்லியாகத் தெரிந்த அவன் உடல் சரேலென இரும்பாக மாறிவிட்டதாலும், இருவர் இழுத்தும் அவனை நகர்த்தக்கூட முடியாததாலும், “வீரரே! தங்களை மரியாதையுடன் நடத்தும்படி தேவி கட்டளையிட்டிருக்கிறார்கள். வீணாக அடம் செய்யாமல் தாங்களாகவே எங்களுடன் வந்து விடுவது நல்லது” என்று கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட இரு வீரரில் ஒருவன் கூறினான். விஜயன் பதில் ஏதும் சொல்லாமலே இரும்பாகிவிட்ட தனது உடலைச் சற்று நிமிர்த்தி. பிறகு சரேலென்று குனிந்து எழுந்து கைகளிரண்டையும் மடக்கி நிமிர்த்தி உதறவே, அவன் கைகளைப் பிடித்திருந்த காவலர் இருவரும் முன்புறத்தில் யாரையோ நமஸ்காரம் செய்யும் உத்தேசம் கொண்டவர்களைப் போல் துரிதமாக இரண்டடி ஓடி, தரையில் குப்புற விழுந்து தண்டனிட்டார்கள். அதே சமயத்தில் விஜயனுக்குப் பின்புறம் படகிலிருந்து தனது பழுப்பு நிறப்புரவியைத் தொடர்ந்து ஏறிவந்த மூர்சமத், விஜயனை மீண்டும் நெருங்கப்போன இன்னுமிரு வீரர்களைக் கண்டு தனது ராட்சஸக் கைகளை அவர்கள் கழுத்துக்களில் போட்டு இழுத்து ரிஷிகுல்யாவின் மண்டபப் படிகளில் உருட்டினான். விஜயன் இரு வீரர்களை மண்ணில் தள்ளியதாலும், மண்டபப் படிகளில் மற்றுமிருவரை சமத் உருட்டி விட்டதாலும், தங்கள் பலம் குறைந்து விட்டதைக் கண்ட மற்ற வீரர்கள் வாட்களை உயரத் தூக்கிக் கொண்டு விஜயனையும் சமதையும் நெருங்கினார்கள்.
Reviews
There are no reviews yet.